Wednesday 29 December, 2010

"சிதிலமடையும் தேவதை"

"வரங்களே சாபங்கள் என்றால்.,
 தவங்கள் எதற்காக ?"
                                        - கவிக்கோ அப்துல் ரஹ்மான்.


அப்பாவி இந்தியர்கள் நம்பும் ஜனநாயக தெய்வங்கள் எல்லாம் தங்கள் வீட்டு விலாசம் மட்டுமே அறிந்தவை.
 ஆளுபவனும்., அதிகாரம் செலுத்துபவனும்., கேள்வி கேட்கவேண்டுபவனும் தங்களுக்குள் உள்ள பரிமாற்ற பிணைப்பினால்  இஷ்டம்போல் திளைக்கிறார்கள்.

" கொடுமை...கொடுமை... என்று கோவிலுக்கு போனால் அங்கும் ஒரு கொடுமை தலை விரித்து ஆடுமாம்". எனும் வகையில் சில  வழக்குகளின் தீர்ப்புகள் "சிலநேரங்களில் சிலமனிதர்களால்" இரவுவிடுதிகளில் அச்சாரம்  இடப்படுகிறது என்று நீதிமன்றங்களில் பேச்சு உண்டு . ( பல நேரங்களில் நல்ல நீதிபதிகளின் மீதும் வழக்கை தோற்ற வக்கீல்கள் பழிப்போட்டு தங்களை காத்துக்கொள்வார்கள் ) ஆனால்.,அந்த பேச்சை முற்றிலும் உதறித்தள்ள முடியாது.

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி(?)களாக இருந்த ஏ.எஸ்.ஆனந்த் , கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டுகளும் அவை மக்களின் பார்வைக்கு வந்ததையும் ., .
கர்நாடக தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரனின் மீதான நூற்றுகணக்கான ஏக்கர் விளைநிலம் சேர்ப்பும்.,
 நீதிபதி சென் மீது பதவி பறிப்பதற்கான பாராளுமன்ற நடவடிக்கை முயற்சி... இப்படி பல.
அதன் விளைவுகள் எப்படியோ!  யாம்  அறியோம் .
( இந்த நாட்டில்.," வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்பதை இங்கு  நினைவில் கொள்வது - ஏமாற்றங்களை தாங்க உதவும் .)

"ஓய்வுப்பெற்ற பதினாறு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதிகளில் நிச்சயமாக எட்டு பேர் லஞ்ச ஊழலில் தொடர்பு உள்ளவர்கள்" என்று வழக்கறிஞர் சாந்திபூசன் கூறுகிறார்.
இக்கூற்றுகளை முழுக்க உதறமுடியாத வகையில் .. நீதிமன்ற ஊழல்களைப்பற்றி மனித உரிமை காவலர், ஓய்வு பெற்ற நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணையர் தனது வேதனையாக தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார் .

அதிகாரத்தை பயன்படுத்தி தனது குடும்பத்திற்கு சுற்றுலா சுக அனுபவம் ஏற்பாடு செய்ய., அதுவே, ஒரு பெண் நீதிபதிக்கு தாங்க முடியாத உஷ்ண நாட்களாக எதிர்காலத்தை மாற்றிவிட்டது. இங்கு கவனிக்க!...பெண் நீதிபதி என்று வலிய குறிப்பிட்டது 'மனிதனின் பேராசைக்கு ஆண்பெண் பேதமில்லை' என்பதற்கே.

நம் நீதித்துறை ஒரு விசித்தரமான நடைமுறையை தவறான போக்கை ஊழல் நீதிபதிகளிடத்தில் கொண்டுள்ளதாக உணரமுடியும்.  திடீரென்று ஊழல் நீதிபதிகள் தன்னிச்சையாக ஓய்வு பெற்று இருப்பார்கள். விசாரித்தால் அண்ணாச்சியின் மீது பிடி இறுகி வெளியேறியதாக சொல்வார்கள்.  "நீதித்துறையின் மீது  மக்களின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்து
போக கூடாது!  மக்கள், நீதி கிடைக்கும் என்ற திடமான  நம்பிக்கையின் அடிப்படையிலாவது., வன்முறையை நாடாமல் இருக்கட்டும்!!" என்று லஞ்ச லாவண்யங்களில் மிதக்கும் நீதிபதிகளை
" மகனே! ஒழுங்கு மரியாதையாக நீயே வீட்டுக்கு போ..."  என எச்சரித்து தெருவாசல் கதவு அவர்களுக்கு கை காட்டப்படுவதாக (?) சொல்லப்படுகிறது .  அது உண்மையென்றால்...ஊழல் அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் பதவியை விட்டால் மட்டும் போதுமே?.
சரி.,நாம் தொடர்வோம் ..அப்படி எச்சரித்தும் காதில் ஏற்றிக்கொள்ளாத  காரிய செவிடுகள் அப்போதும் .,  " நமக்குதான் அவர தெரியுமே! இவுங்க என்ன செய்ய முடியும்?"
என்று  படு மேதாவித்தனம் புரியும்போது  மட்டுமே இந்த பெண் நீதிபதியை போல், தன் சொந்த செல்வாக்கின் மீதான  நம்பிக்கையால்  செய்திதாள்களுக்கு வருகை புரிகிறார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது தன் சொத்துகளை இழந்து சேவைபுரிந்து ...
 அதன் அடிப்படையில் மட்டுமே சுமார் 85
விழுக்காடு அளவிற்கு முதல் பாராளுமன்ற மந்திரி சபையில் இணைந்து நேர்மையுடன் நாட்டு நலனில் வழக்கறிஞர்கள் பங்கேற்றது அந்தகாலம் என்றால்...
இப்ப...மொத்த இந்தியநலனையும் வீட்டுக்கு கொண்டுவந்த நம்ம இனமான(?) ராசாவும் வக்கீலுதான்.


வேலியே பயிரை மேய்ந்தால் வெள்ளாமை வீடு சேருமா?
நம்பியவனே கழுத்தை அறுக்கும் போது., அரசாங்கங்கள் சுரண்டல் அமைப்பானபோது அதை தடுத்து மக்களுக்கு அரணாக இருக்க வேண்டியே நீதிபரிபாலனை மன்றமும் கோரைப்பற்களோடு குருதி சொட்ட நிற்கிறது.

கேள்விகேட்கவேண்டியவனே குற்றவாளி கூண்டில் நிற்கும் போது நீதி வெட்கி தலைகுனித்து வெளியேறவேண்டிய கட்டாயம் உள்ளது.  அது சிலநேரங்களில்
அணைப்பவர்களின் கைகளை சென்றடையும் போது அது தீவிரவாத முகவரியாகிடுகிறது.

பெருமைக்குரிய அலஹாபாத் உயர் நீதிமன்றத்தை சமீபத்தில் உச்சநீதிமன்றம்
 " அங்கு ஏதோ அழுகி உள்ளது " என்று குற்றம் சாட்டும்போது...
 வெறுமனே அதனை உயர்ந்த நீதிபரிபாலனை அமைப்புகளிடையே ஏற்பட்ட சண்டையாக மட்டுமே ஊடகங்கள் பார்கின்றன .
உண்மையில் அவை  .,  எல்லா இடங்களிலும் உள்ள சத்தியத்திற்கும,.அநீதிக்கும் இடையே ஆன உச்சகட்ட உரசலின் வெளிப்பாடே .

நீதிமன்றகளின் மாண்பு அதன் இருக்கையில் அமரும் தனிப்பட்டவர்களை பொறுத்தே அமையும்.
அது காலத்திற்கு காலம் அமருபவர்களை சார்ந்து புகழையும்  ., இகழ்வையும் அடையும்.

"விதைகளை தரமற்றதாக தேர்ந்தெடுத்து விட்டு...பலன்களை வீரியமாக எதிர்நோக்குவது"  மூடர்களின் எதிர்பார்ப்பே அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
சட்டக்கல்வியை நோக்கி  அதில் நுழைபவர்களில் பலர் சமூக நோக்கமற்றவர்களாக இருக்கும் போது எங்கு நாம் எதிர்கால நீதியை
தேடுவது ?




                               -நீதி தேவதையின் நான்காம் ஜாமத்து உறக்கம் தொடரும்...



                              

Tuesday 12 October, 2010

"வாழ்வாங்கு வாழட்டும் ஊழல்"



ஜன்னல் தாண்டி சூரியன் தன் கதிர்களை பிரவேசிக்கும் முன்பே சிணுங்க தொடங்கிய கைபேசி., இரண்டாம்முறையும் தொடர்ந்து ஒலித்தது...பின்னிரவிற்கு கொஞ்சம் முன்னர் மட்டுமே படுக்கைக்கு போனதால் விழிகள் பிரிக்க இயலா நித்திரையை சிரமத்தோடு அகற்றி கைபேசிக்கு செவிமடுக்க...

"ஹலோ, வணக்கம் சார்., நான் ராஜசேகர், ஹலோ FM லிருந்து...இன்றைய தினசரிகளில் உச்சநீதிமன்றம் அரசு அலுவலங்களில் லஞ்சதொகையை நிர்ணயிக்க சொல்லி தன் வேதனையை வெளிப்படுத்தி இருப்பதைப்பற்றி முக்கிய செய்தி வந்துள்ளது., இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன?"  
  ( அந்த செவிமடல் கிழே இணைக்கப்பட்டுள்ளது )

வார்த்தைகளுக்கு செவிகொடுத்த வண்ணம், கதவைத்திறந்து வெளியே காத்திருந்த செய்திதாளின் மடிப்பை கலைத்து விழிகளை மேயவிட்டப்படியே பேசுகிறேன்.., கூடவே நினைவு அலமாரியிலிருந்து பக்கங்களை புரட்டியபடி...
பத்து நிமிடங்களில் அந்த செவிமடல் முடிந்தது. ஆனால் நினைவின் பக்கங்கள் கொஞ்ச நேரம் படபடத்தபடி இருந்தது.

ஏன் உச்சநீதிமன்றம் இப்படி தன் உச்சக்கட்ட வேதனையை வெளிப்படுத்தியது., ஏன் இந்த நையாண்டி.... எதற்காக இந்த நயம்பட வசைபாடுதல்?
சரி. இந்த கருத்தை சொன்ன நீதிபதி யார்? அவரின் யோக்கியாம்சம் என்ன? ஏனெனில், வார்த்தைகள் அதைக்கூறிய மனிதரை பொறுத்தே மகத்துவம் அடையும்.


இன்று இந்தியாவில் ஊழல் ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகிப் போய் விட்டது. ஊழலைப் பொறுத்தவரை நமக்கு மிக அதிகமான சகிப்புத் தன்மை வளர்ந்து, ஊழலை ஒரு பொருட்டாகவே நாம் கருதாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட நபர்கள், கட்சி வித்தியாசங்களை கடந்து அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். தேர்தலை சந்திக்கவும், கட்சித் தாவும் எம்எல்ஏ எம்பிக்களை விலைக்கு வாங்கவும், கருப்புப் பணம் பயன்படுவதால், ஊழலில் ஊறித் திளைக்க அரசியல் கட்சிகள் அஞ்சுவதே இல்லை.

ஊழலில் பெருமளவில் எப்போதும் தப்பித்துவிடும் விலாங்குமீன்கள் நம் அதிகாரவர்க்கம். . .
கடைகோடி கிராமநிர்வாகத்திலிருந்து.,குடியரசு மாளிகை வரை வேர்விட்டு விழுதுவிட்டு அடர்ந்து தளைத்து நிற்கும் இவர்கள் பிறப்பிலிருந்து மரணம்வரை நம்மை நிழலாய்...ஊழல் உருவாய் துரத்துகின்ற ஓநாய் வர்க்கம்.
அரிதிபெருமளவில் மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறது.
மக்கள் தன்னை ஆள்பவர் யார் என்று தீர்மானிக்க பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கிற அளவிற்கு லஞ்சம் புரையோடி விட்டது.

பக்கத்துக்கு வீட்டில் வேலைக்குசெல்பவனை குறைசொல்லும் இதேசமுதாயம்..தன் பிள்ளைக்கு உத்தியோகம் கிடைத்தால் "பிழைக்க தெரியாம இருந்துடாதே!" என்று புத்தி சொல்லி அனுப்புகிறது.

வாழ்க வையகம்.

Thursday 30 September, 2010

அய்யோத்தீ தீர்ப்பு ! -- ஒரு மீள் பார்வை ( நீதி தேவதை உறங்குகிறாள் - 2)

கயிறு மேல் நடந்து கடக்கிற செப்படி வித்தையை கனகச்சிதமாக செய்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ அமர்வு.

அறுபது வருட நகர்வு ஒரு முடிவின் ஆரம்பத்திற்கு இந்தியாவை இழுத்திருக்கிறது.

உயர்நீதிமன்றத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் அரசியல் அமைப்பால் வழங்கப்பட்டுள்ள உயரிய அதிகாரமே நீதிபேராணை.... மற்ற உயர்நீதிமன்றங்களை விட அதன் ஆற்றலை அதிகம் பயன்படுத்திய ஒரே உயர்நீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றமே, அதன் தீர்ப்புகள் எப்போதுமே அரசுகளுக்கு அச்சத்தையே இதுவரை கொடுத்துவந்துள்ளன.  அதன் பலதீர்ப்புகள் இந்தியாவின் கீழ்நீதிமன்றகள் பலவற்றில் வழிகாட்டுதலுக்கு பயன்படும் ஆவணங்கள்.
இந்தியாவிற்கு ஒரு எமெர்ஜென்சி வந்ததே இந்த பெருமைக்குரிய அலகாபாத் நீதிமன்றம் இந்திராவின் தேர்தல் முடிவு செல்லாது என அறிவித்ததுதான். அதனை  தொடர்ந்து இந்திராகாந்தி அரசாங்கம்  ஏற்படுத்திய எமெர்ஜென்சி  எனும் அமளிதுமளி (என்னபெயர் சொல்லி காங்கிரஸ்காரர்கள் அழைத்தாலும் அது  ஜனநாயக படுகொலை -     இப்போதைய அரசியல் தரங்கெட்டவர்களால் அந்த படுகொலைகூட  பரவாயில்லை எனும் அளவிற்கு எமெர்ஜென்சி கூட  நியாப்படுத்தபட்டுவிட்டது ) . அயோத்தி தீர்ப்பின் விளைவால்  என்னஎன்ன  நடக்குமோ என பத்திரிகைகள் பரபரப்பு ஜோசியங்கள் கூறிக் கொண்டிருந்தன. தொலைகாட்சிகளோ ஊகங்களால் பிரித்து மேய்ந்து கொண்டுஇருந்தார்கள்.சில மாநிலங்கள் விடுமுறை விட்டது மாதிரி., தனியார் நிறுவனங்கள் மதியமே தன்னை துடைத்து வைத்துகொண்டு எதிர்வினையை பொறுத்து நாளைய  அலுவல் தீர்மானிக்க முடிவு செய்து  இந்தியர்களை ஜுரம் பிடிக்க வைத்தார்கள். 

எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறி  இரண்டு இந்துக்களும் ஒரு முஸ்லிம் என காணப்பட்ட லக்னோ அமர்வின் தீர்ப்பும் 2 :1 என்ற அளவில்  "அடடா நல்ல சான்சு நழுவி போய்சே!" என வழக்கில் ஈடுபடாதவர்களை வருந்த செய்கிற அளவிற்கு எல்லோருக்கும் பங்கிட்டு கொடுத்து பெருந்தன்மை காட்டி,   முதல் முறையாக அரசாங்கத்திற்கு நெஞ்சில் பால்வார்த்திருக்கிறது அதே அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பிரச்சனை இல்லாமல் முடிந்தால் போதும் என்று நினைக்கும் மனநிலையில் நின்று விட்டதோடு அல்லாமல்,
தீர்ப்பு சொல்லப்பணிக்கப்பட்ட அமர்வு கடைசியில் மறைமுக சமரசத் தீர்வு சொல்லி இளைப்பாறிவிட்டது.

முஸ்லிம் வக்பு வாரியம் தன் வசம் வைத்திருந்த ஏறத்தாழ அரை ஏக்கர் நிலத்தையும் அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருந்த சுமார் இரண்டரை ஏக்கரையும், மூன்றாக பிரித்து 1 : 1: 1 என வழக்கு தரப்பினர் மூவருக்கு பங்கிட்டு கொடுத்துவிட்டு நீதிபதிகள் மூவரும் தங்கள் சொந்த கருத்துகளை அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த தாக்கத்தின் அளவிற்கு வெளியிட்டு இருந்தார்கள்.

"பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம்,  இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை”    -- நீதிபதி சர்மா தீர்ப்பின் சாரம்.


”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” -- இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” --நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

ஒருவேளை, மூன்று சீக்கிய நீதிபதிகளோ அல்லது மூன்று கிறித்துவ நீதிபதிகளோ அமர்வில் இருந்திருந்தால் வேறுமாதிரி கருத்துகளும், தீர்ப்பும் மாறி இருக்குமோ என்னவோ.

திர்பளித்த நீதிபதிகள் இந்நேரம் நீண்டநாட்களுக்குப்பிறகு நிம்மதியாக உறங்கிகொண்டிருப்பார்கள்.,
நீதிதேவதையைப்போலவே......                                          

                                                                                                         இன்னும் பேசுவோம்...











Saturday 25 September, 2010

ஒரு உயிர் இரு மரணம் - "திலீபா"ஞ்சலி !

திலீபா !....
உமக்காக .,
ஊமைகள் அழுகிறோம்!!
இதயமற்ற  தேசத்திலிருந்து...

கால்நூற்றாண்டிருக்கும் .,
காந்தியம் புதைக்க எழுப்பபட்ட 
கல்லறையின் முன்பு
தேசமென கருதி நீ கைதொழுதாய் !
நெருப்பை நீர் கொண்டு அணைக்க 
உன் ஊன் உருக்கி
பெருமடல் எழுதினாய்!

செவிப்பறைகள் கிழிய
நீ எழுப்பிய அழுகுரல்
உலகெங்கும்  ஒலித்தது!
என் இதயமற்ற தேசத்தின்
செவிகள் ஏற்கனவே இறந்திருந்தது.

நீ  துப்பாக்கியில்
ரோஜாக்களை நிரப்பி 
புறாக்களை ஏந்தினாய!

புத்தன் பிறந்த என் தேசமோ
சிறகுகளைகொய்து
சமாதானத்தை புதைத்தது.


காந்தி வணிகப்பெயர் பார்த்து 
வாழ்ந்தபிணங்களிடம்  வரங்கேட்டாய்!
தீர்மானிக்கப்பட்ட சாபங்களுக்காக 
உன் உயிர் காணிக்கையாக்கப்பட்டது.

மெல்ல நீ இறந்து கொண்டு இருந்தாய்...
காந்தியம் அடைக்கத் தயாராகிய 
சவப்பெட்டியின் மூடியில்
ஒவ்வொரு நாளும் ஒரு ஆணி
அறையப்பட்டுக்கொண்டிருந்தது.

நெருப்பு
நீரை எரித்தது!
முழுவதுமாய் ஒருநாள் நீ எரிந்துபோனாய்.

 உன் உயிர்பிரிந்த நாளில் ...
 முழுவதுமாய்இறந்து கிடந்தது -
 நீ  ஆதரித்த
அனாதை காந்தியமும்.

உன் வித்துடல்
ஊர்வலமானபோது
காந்தியம் சவப்பெட்டியில்
மூடப்பட்டிருந்தது.

Tuesday 31 August, 2010

நீதிதேவதை உறங்குகிறாள் !

நீதிமன்றங்களின்  இன்றையநிலை என்ன?
வெட்கக்கேடு.
உண்மையைச்சொன்னால்  .,  நீதித்துறை இன்று அரசின் மற்றொரு கைப்பாவை.

நம்பிக்கையின் கடைசிதீர்வாக இருக்கவேண்டிய நீதித்துறை இப்போது தன் சுயகவுரவத்தை இழந்து நிற்கிறது.
ஜனநாயகத்தின் முக்கியத்தூணாக கருதப்பட்ட நீதித்துறை, இப்போது வெறும் பொம்மை அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டது.

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கை உறுதி செய்யும்போது உங்களுக்குள் பளிச்சென ஏற்படும் நீதித்துறை மீதான நம்பிக்கைகளை  போபால் விஷவாயு தீர்ப்புகள் போன்றவை அடியோடு எரித்துவிடும்.

நீதித்துறை ஏன் இந்த இழிநிலைக்குள் சென்றது?
பலகாரணங்கள் உண்டு...
நீதித்துறை என்றால் சாமானிய மனிதனுக்கும் முதலில் வரும் எண்ணம் என்னவென்றால்-காலதாமதம் மட்டுமே.
"DELAYED JUSTICE IS DENIED JUSTICE " அதாவது,
" தாமதிக்கப்பட்ட நீதி என்பது  மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் " எனும் வாசகம் நீதித்துறை அரிச்சுவடிகளில் ஓன்று.

கட்டைபஞ்சாயத்துகள் பெருகிபோனதற்கும், மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கைகள் குறைந்து போனதற்கும் இந்த காலதாமதம் மட்டுமே முக்கிய காரணம்.
ஏன் இந்த காலதமாதம்., யார் இதற்கு காரணம்?
நாங்களும்,நீங்களும், அரசும்.

 பாரதி சொல்வான் "நான் ஒரு கவிஞன்; என் தொழில் எழுத்து" என்று.
நான் இங்கு ஒரு பதிவராக உங்களோடு கைகோர்த்து நடந்தாலும் , எம் தொழிலால் நான் ஒரு வழக்கறிஞன், ஆகவே நாங்கள் எனும் பதம் தேவையாயிற்று. 
இந்த தொடர் படிக்கும் நீங்கள் மட்டுமே இங்கு நீதிபதிகள்... நீங்கள்தான் என் எழுத்தின் நேர்மையை எடைபோடவேண்டும்.
இத்தொடரில், எம்மை நியாப்படுத்தும் கேடயவார்த்தைகள் வரலாம், அது எம் தரப்பின் நியாயத்தை எடுத்து வைக்க மட்டுமே.
அதற்காக,
தேவையற்ற சப்பைக்கட்டுகள் இருக்காது என்பதை உறுதிசெய்கிறேன். ஏனெனில், நான் கொண்ட வேடம் இத்தொழில் ஆகினும், மானுடம் பேணும் மகத்துவம் அறிவேன்.

சேவைத்தொழில் என்று சொல்லபடுபவை இரண்டு;
ஓன்று..மருத்துவம்
மற்றொன்று ., சட்டத்தொழில்.
ஆனால்  இரண்டும் பாதை மாறி பல வருடம் ஆகிவிட்டது.
மற்ற தொழில்களை போலவே பணம் மட்டுமே இன்று பிரதான இலக்கு.

காந்தியடிகள் சொல்வார் வணிகநிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களே தெய்வம் என்று. ஒவ்வொருதொழிலுக்கும்  அப்படியே.,
வக்கீல்கள் தன் கட்சிகாரர்கள் விருப்படியே செயல்படமுடியும். அதுதான் தொழில்நேர்மை. வழக்கறிஞர் தொழிலில் தவறு என்று ஒன்றை மட்டுமே குற்றம் சொல்ல வேண்டும்.,  தன் கட்சிக்காரன் எப்படி பட்டவனாக இருந்தாலும் எதிர்த்தரப்போடு உள்ளுக்குள் கைகோர்க்க கூடாது. அதுமட்டுமே வழக்கறிஞர் தொழிலில்  நேர்மை. அதைவிடுத்து, பொதுஜனங்களில் பலர் பேசுவதைப்போல் அவருக்கு  இவர் அப்பியர் ஆகி இருக்க கூடாது, அந்த கேச எடுக்க கூடாது., இந்த மாதிரி வழக்கில் வாதாட  கூடாது என்று சொல்வது போல் அல்ல.  THE ADVOCATES ACT என்று வழக்கறிஞர்களை நெறியுருத்தும்  சட்டம் உண்டு (சட்டங்கள் இயற்றுவது வழக்கறிஞர்களோ,நீதிமன்றமோ இல்லை - அந்த வேலை பாராளுமன்றத்தின் பணி )  அது தன்னிடம் வரும் கட்சிக்காரர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவருக்கு வழக்கறிஞர் மறுக்காமல் வழக்காடவேண்டும் என்கிறது.

பொதுவாக குற்றவழக்குகளில்., இந்தமாதிரி வழக்குகளை ஏன் இவர்கள் எடுக்க வேண்டும் என்று பரவலான கேள்வி வழக்கறிஞர்கள் மீது  உண்டு., வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் உண்மையில் குற்றம் செய்தவனா அல்லது அப்பாவியா என்று தீர்மானிக்கவேண்டியது நீதிபதிகளின் வேலை. அது வழக்கறிஞர்களுடையது அல்ல.
நீங்கள் வாதாடாமல் விட்டால்  குற்றவாளிகள் எப்படி தப்பிக்கமுடியும் என்று உங்களுக்கு நியாமான கேள்வி எழலாம். உண்மையே., தயவுசெய்து குற்றம்சாட்டபட்டவர்கள் எல்லோரும் தவறு இழைத்தவர்கள்.,தண்டனைக்குரியவர்கள் என்று அவசர முடிவுக்குள் செல்லாதீர்கள்.
பணம்,செல்வாக்கு படைத்தவர்களோடு உங்களுக்கு எப்போதாவது பிரச்சனை நேரிட்டால் அப்போது உணர்வீர்கள்....குற்றம்சாட்டப்படுபவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை என்று.

"கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை" எனும் மாதிரி சிலவழக்குகளில் வழக்காடுவதை பற்றிய ஏன் என்ற உங்கள் நியாமான கேள்விகளை  எங்கள் நெஞ்சம் அறியும்.
ஒன்றை அறியுங்கள்...வழக்கறிஞர்கள் வானில் இருந்து குதிக்கவில்லை., உங்களைப்போன்ற ஒரு குடும்பதிலிருந்துவே வந்துள்ளனர்.
சாதாரண ஆசாபாசாங்கள் ஆட்டிபடைக்கும் மனமே எங்களுக்கும்.
"கண்களுக்கு முன் திறக்கப்படும் பெட்டிகள்., பலநேரங்களில் எங்கள் இதயகதவுகளை  அறைந்து சாத்திவிடும்".
 நீங்கள் நினைப்பது மாதிரி எல்லோரும் அப்படி அல்ல., காந்தியும், காஸ்ட்ரோவும்,நேரும் , வ உ சி யும் இங்கிருந்து வந்தவர்களே.
எங்கெல்லாம் மக்கள் விரோத செயல்கள் காணப்பட்டாலும் அதை எரிக்கும் நெருப்பின் பொறி ஆரம்பத்தில் இங்கெழும்.

எங்களில் ஒருவர், ஒரு கண் தெரிந்த குற்றவாளிக்கு ஆஜராகும்போதே, அதே குற்றவாளி நீதிமன்ற வாசலில் உணர்ச்சிப்பெருக்கில்  பலவழக்கறிஞர்களால்  தாக்கப்படுவதை உங்களுக்கு பலநேரங்களில் ஊடகங்கள் உறுதிசெய்யும்.

சரி விசயத்திற்கு வருவோம்.,

"வாய்தாராணி" என்று ஜெயலலிதாவிற்கு சமீபத்தில் திமுக பட்டம் அளித்து பெருமை படுத்திய அளவிற்கு எல்லோர்க்கும் எளிதில் புரியும் சொல் "வாய்தா".
 
எங்களில் சிலபேருக்கு "வாய்தா வக்கீல்" என்று பெயரே உண்டு.

இதற்கு நாங்கள் மட்டுமல்ல நீங்களும், அரசும் காரணம்., எப்படி...?



                                                                                           இன்னும் பேசுவோம்...


.

Friday 13 August, 2010

ஊடக அதர்மங்கள்

ஜனநாயகத்தின் நான்காம்தூண் என்று  தன்னை பெருமையாக பேசிக்கொள்ளும் ஊடகங்கள், மற்ற மூன்று தூண்கள் என ஜனநாயகம் குறிப்பிடும் சட்டமன்றம்,நிர்வாகத்துறை, நீதித்துறை ஆகியவை எப்படி தன்னிலை தாழ்ந்து தலைகுனிந்து நிற்கிறதோ "அப்படியே ஆகட்டும்" என்று தானும் சாக்கடையில்  விழுந்து புரள்கிறது.

ஒரு பத்திரிகைகாரனுக்கு இருக்கவேண்டிய நேர்மையும், சமூகத்தில் மலிந்து கிடக்கிற அவலங்களை கண்டு வரவேண்டிய தார்மீக கோபமும் இன்றி புதிய இதழியல் பாணி  இப்போது  எங்கும் பரவலாக காணப்படுகிறது.

மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல் என்பதிலிருந்து விலகி  தன் வருவாயை நிலைபடுத்துதல் என்கிற தனிமனிதநோக்கில் குறுகி தேய்ந்து வேறு வகையில் வளர்ந்து நிற்கிறது பத்திரிக்கை தர்மம்.

தன்னை நடுநிலை நாளேடு என்று கட்சிப்பத்திரிகைகளும்
பிரகடனப்படுத்தி கொள்கிற அளவிற்கு இருக்கிறது இப்போதைய நடுநிலை தன்மை.

உண்மையில் இன்றைய பத்திரிகைகள் யாருடைய சிந்தனைகளை, வெளிப்பாடுகளை, மனக்குமுறல்களை, தேவைகளை கருத்தில் கொண்டு செயல்படுகின்றன ?

மக்களுடையதா? இல்லை .,

இன்னும்  விலைபோகாத சில உண்மையான எழுதுகோல்களின்  உயிர்த்துடிப்போடு வாழ்கிற மானுட காவல் புரியும் நிருபர்களுடையதா? இல்லை.,

 தன்பழுத்த ஞானம் கொண்டு அலசிஆராயும் ஆசிரியருடையதா....?

இதில் எதுவுமே இப்போதைய பெரும்பாலான பத்திரிகைகளின் அளவுகோல் இல்லை.

யதார்த்தத்தில் அவை., தனிப்பட்ட சில முதலாளிகளின்- அதாவது பணம் மட்டுமே குறிக்கோள் உடைய, அப்பத்திரிகையின் நிறுவனர் என தன்னை அடையாளப்படுத்திகொள்ளும் ஒரு வணிகரின் சொந்த விருப்பு வெறுப்புகளின்,சாதக பாதக அளவீடுகளின் லாப நஷ்ட கணக்கீடு.

 ஆளும்தரப்பின் பிரச்சார துண்டறிக்கை என தன் நிலையை மாற்றிக்கொண்டு யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களுக்கு ஏற்ப அவர்களின் அடிபொடிகளாக மாறி தன் விளம்பர வருவாயை, சலுகைகளை  மட்டும் பாதுகாத்து கொள்ள கடைபிடிக்கிற குறுகிய தந்திரம் மட்டுமே அவை கடைப்பிடிக்கும் பத்திரிக்கை கொள்கை.  

இதையும் மீறி இவர்களுக்குள் இருக்கிற சாதிப்பற்றும் அதன் தொடர்ச்சியும் அதன் விளைவை வெளிப்படுத்தும் விதமும், உள்சண்டையும் முற்றுபெறாத தொடர்கதை...  
நம்புங்கள் .,  இவர்கள்தான்  ஊரை சுத்தப்படுத்த அவதாரம் எடுத்தவர்கள்.

இவர்கள்தான் தெருவோரத்து பிச்சைகாரர்களை கார்ப்பரேட் சாமியார்களாக விசுவரூபம் எடுக்கச்செய்யும் விளம்பர வாகனங்கள்.
உள்ளுர்ப்பொறுக்கிகளை மக்கள் சேவை புரியும் ராபின்குட் மாதிரி கதைபுனையும் மந்திரவாதிகள்.
 தங்களுக்கு ஒளிப்பரப்பு உரிமை விற்காத படங்களை குப்பை என்றும், தங்களின் குப்பைகளை வைரம் என்றும் வரிசைபடுத்தி வியாபாரம் புரியும் நெறிகாக்கும் ஊடகங்கள் .

கருத்து சொன்னால் "ஒ" போட அனுமதிக்க பயப்படும் அளவிற்கு தைரியமுடைய கைப்பாவை குழுமங்கள்.

இவர்கள் சிலநேரங்களில் பொங்கியெழும் போது ஏற்படும் புழுதிகளில் தெரியாமல் போகும் அதன்திரைமறைவில் இவர்கள் நடத்தும் பிளாக்மெயில் பேரங்கள்.


பலநேரங்களில்  ...
கவர்களில் வரும் லெட்சுமி நிருபர்களுக்கு  சந்தோசம் என்றால்., சூட்கேசுகளில் வரும் குபேரன் நிறுவனர்களின் தலைப்புசெய்திக்கு விசயங்களை சேகரிக்கின்றன.

 மொத்தத்தில்.,
 தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன் எனும் முதுமொழிக்கு இவர்கள்தான் சமீபகால  உரிமைதாரார்கள்.

"நிமிர்ந்த நன்நடை ;
நேர்கொண்ட பார்வை ;
நிலத்தில் யாருக்கும் அஞ்சாத நன்னெறி" 

இது பாரதி கண்ட இதழியல் தர்மம் ....எங்கே இப்போது?

Saturday 17 July, 2010

காலப்பிழை..














உன்னைப் பார்த்தபின்
கிளியோபாட்ரா
கண்ணாடி பார்த்திருந்தால்
அந்தக் கோணல்
மூக்குக்காரியின்
கர்வம் செத்திருக்கும்..

நான் மாதவிகளின்
வீடுகளில்  இருந்தபோதும்...
கண்ணகியாய்
என் பெயர் சேர்த்தே உன் பெயர்
அலங்கரித்தாய்..

விமர்சித்த உன்
உறவுகளையும் உதறி
தாட்சாயணியாய் அவதரித்தாய்..

என் ஆத்திரங்களை
உன் பொறுமைகளால் துடைத்தாய் ..
என் வறுமையை
உன் பட்டினியால்
நம் பிள்ளைகளிடம் மறைத்தாய்..

நூற்றாண்டுகளின்
கால இடைவெளியில்
பலர் சரித்திரமானார்கள்...
நீ..!
என் அடுக்களையில்
அடைக்கலமானாய்...

Saturday 19 June, 2010

எப்போதும் ஏன் போராடுகிறார்கள்?

"உயர்நீதி மன்றத்தில் தமிழ் ஒலிக்க வேண்டும் !"
போராடும் வழக்கறிஞர்களின் கோரிக்கை.
தன் தாய்மொழியில் பேசுவதற்கு நீதிகேட்டு நீதிமன்ற வாசலில் சாகும்வரை உண்ணாநோன்பு... 

இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?
எப்பபார்த்தாலும் போராட்டம்...கைது., சச்சரவுகள்... போங்கப்பா என்று உங்கள் சலிப்பும் முனகலும் கோபமும் புரிகிறது.



விளக்கப்படாத விசயங்கள் இடைவெளிகளை அதிகமாக்கி இனம்புரியாத வெறுப்பிற்கு அழைத்துசென்று விடும்.
ஏன் இவர்கள் எப்போதும் போராட்டங்களோடு வாழ்கிறார்கள்?


போராட்டங்களை யாரும் விரும்புவது கிடையாது.. ஆனால் போராட்டங்கள் யாரையும்விடுவது கிடையாது.


ஒவ்வொரு மனிதனும் தனக்கான போராட்டங்களை எதிர்கொண்டு தோள் கொடுக்கும்போது அவன் குடும்பத்திற்கு மட்டுமே உரியவன் ., அதே மனிதன் விரிந்து குரல் எழுப்புகிறபோது சராசரி எல்லைகளை தாண்டி உயர்கிறான் .


உலகின் எந்த போராட்டங்கள் ஆகட்டும் ....
அதில் தலைமையேற்ற முக்கியமானவர்கள் வழக்கறிஞர்கள் .
இது அவர்களின் தொழில் காரணமே தவிர வேறில்லை.

ஒவ்வொருவருக்கும் தான் ஈடுபடுகிற தொழிலின் சிக்கல்களுக்கு மூலகாரணம் புரியும்.
அதுபோலவே சமுதாய பிரச்சனைகளுக்கு மூலகாரணம் இன்னவென்று தொழில்ரீதியாக வழக்கறிஞர்கள் அறிய வாய்ப்புகள் மிக அதிகம்.

உடலை மையப்படுத்தி மருத்துவர்கள்;
நேரடி அறிவியலை மையப்படுத்தி பொறியாளர்கள்;
சமுதாயத்தை மையப்படுத்தி வழக்கறிஞர்கள்...இவை தொழில் அமைவு .

அரசாங்கத்தை ஆளும் தனிநபர்களின் எண்ணங்கள் விளைவாக;
முதலாளித்துவ செயல்பாடுகள் காரணமாக;
மக்கள் நலன்களிலிருந்து விலகி தனிநபர்களின் ஆதாயத்திற்கு ஏதுவாக சட்டங்கள் வளைக்கப்படும்போது
அவற்றை தொழில் காரணமாக நுட்பமாக உணர்பவர்கள் வழக்கறிஞர்கள்.
அதன் காரணமாகவே இன்று உலகை ஆளும் அரசியல் தத்துவங்களில் மிக பெரும்பான்மை வழக்கறிஞர்களுக்கு சொந்தமானது. அமைதிவழியில் காந்தி ஆகட்டும் ...ஆயுதபோரட்ட வழியில் காஸ்ட்ரோ ஆகட்டும்.


வழக்கறிஞர்கள் எல்லோரும் சிறந்தவர்கள் என்று பொருள் கிடையாது.. எல்லா தொழிலை விடவும் அதிகமாக குற்றவாளிகளின் பிள்ளைகளும், சில சமுதாய குற்றவாளிகளும் தங்களை பாதுகாத்து கொள்ளவும்,
வேறு தொழில் படிப்பு கிடைக்காதவர்களும் இந்த தொழிலுக்குள் வருகிறார்கள்... ஆனால் அதேவேளை., மற்ற எந்த தொழிலை விடவும் மிக அதிக சமுதாய சிந்தனை உடையவர்கள் இந்த தொழிலை ஆரம்ப வறுமை இருப்பினும் ஏற்கிறார்கள். ஆகவேதான், இயற்கை தலைவர்கள் சிலர் இங்கிருந்து வெளிப்படுகிறார்கள்.


ஈழ போராட்டத்தை தோற்றுவித்தவர்களும்., ஈழப்போர் உச்சம் பெற்றபோது இங்கு தன் வருமானம் இழந்து போராட்டத்தை முதலில் துவங்கி, விடாது தொடர்ந்து., அரசின் தேர்தல் அச்சத்தின் விளைவாக அடிப்பட்டு இரத்தம் சிந்தியவர்களும் வழக்கறிஞர்கள் மட்டுமே.
அரசாங்கத்தை ஆளும் தனிநபர்களின் வீட்டு சொத்தாக ஊடகங்கள் இருந்ததால் ஒருபக்கத்து எதிர்விளைவு காட்சிகள் மட்டும் திருவாளர் பொதுஜனம் கண்களுக்கு காதுகளுக்கு அளிக்கப்பட்டன. அதனால் வழக்கறிஞர்கள் நடத்தியவை மட்டுமே நடந்தது என்பதுபோல அரசாங்க பொய்கள் ஓதப்பட்டன.
அரசாங்கமும் , ஆராயதவர்களும் மட்டுமே குற்றம் சாட்டினார்கள் . ஆனால்., வழக்கறிஞர்கள் பற்றி ஒப்பில்லாத முத்துக்குமார் உணர்ந்தார். ஆகவேதான் தன் உடலை தன் கோரிக்கைகளை பத்திரமாக கொண்டுசேர்க்க கோரினார். அதை உணர்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வசம் சேர்த்தார். அந்த சான்றிதழ் போதும்! வேறு வேண்டாம்.

இப்போது நடைபெறும் இந்த தாய்மொழி நீதிமொழியாக கோரும் போராட்டம் ஏன்?தன்மண்ணில் தன்மொழிபேச போராட்டம்., மக்களுக்கான அரசாங்கம்., மக்களுக்கான நீதிமன்றங்கள்., மக்களுக்கான சட்டங்கள் எனும்போது ஏன் மக்களின் மொழி அங்கு பேசப்படகூடாது.

உண்மையில் இது மக்கள் கையில் ஏந்தவேண்டிய போராட்டம்., மக்கள் ஊமைகளாக அரசாங்கத்தை எதிர்க்க துணிவற்றவர்களாக இருப்பதால் அதைஎதிர்த்து இதுநாள் வரை தொழில் நடத்தியவர்களே போராடுகிறார்கள்.

எல்லா நாடுகளின் விடுதலை போராட்டத்தில் எப்படி மக்களில் சிறு பிரிவு மட்டும் எல்லோருக்குமாய் போராடியதோ அப்படியே இங்கும் சில உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்., ஆனால் பலன் எல்லோருக்கும் கிட்டும்.



மாற்றான் தாய் மனப்பான்மை எதிர்த்து இந்த போராட்டம்...
இந்தியாவில் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அங்குள்ள உயர்நீதிமன்றங்களில் அவர்களின் தாய்மொழியில் வழக்காடும் உரிமை பல ஆண்டுகாலமாய் நடைமுறையில் உள்ளது. ஆனால், நம் தாய்மொழிக்கு மட்டும் தடைகள் எங்கிருந்தோ வரும்.



செம்மொழி மாநாடிற்க்கு இடையூறா இந்த போராட்டம்?முதலில் இந்தமாநாட்டின் நோக்கம் உண்மையில் தமிழின் வளர்ச்சிக்கா அல்லது வேறு காரணமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்...
மேலவைக்கு பத்து நாட்களில் ஜனாதிபதி ஒப்புதல் வாங்கிய அரசு, அன்னைத் தமிழுக்கு நான்கு வருடமாய் முயலாதது ஏன்?
இந்த தருணம் விட்டால் வேறு சரியான சந்தர்ப்பத்தை நீங்களே கூறுங்கள் போராடும் அவர்களுக்கு.




Monday 17 May, 2010

புத்தனின் ஆசை !...



என் பெயரை சொல்லியே
எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.

நான் ஞானம் பெற்ற போதிமரத்தின்
கிளை கொண்டுவந்த அந்நியர்கள்;
உன் மண்ணை ஆக்கிரமித்தார்கள்.

நரவேட்டை மறைக்க
கூடாரங்கள் தேவைப்பட்டன;
என் பெயரால்
ஆலயங்கள் அமைத்தார்கள்.

வந்தேறிய அவர்களுக்கு
மண்ணுரிமை கோர
வரலாறு அவசியப்பட்டது ;
மகாவம்சத்தை மாற்றினார்கள்.

எல்லா அவலங்களும்
என்பெயர் சொல்லியே
அரங்கேற்றப்பட்டதால் -
வெலிக்கடையில் கண்கள்
நோண்டப்பட்டபோது
நான் விழிகள் இழந்தேன்;

கர்ப்பிணிகள் வயிறு கிழித்து
சிசுக்கள் சிதைக்கப்பட்டபோது
என் இருதயத்தில் துர்நாற்றம் வீசியது;

வல்லுறவில் பெண்கள் துடித்தபோது
தலைவிரி கோலமாய் என் அம்மா
என் முன்னே தலையில் அடித்துக்கொண்டு
சபித்தபடி  மண் அள்ளி எறிந்தாள்.

உன் பெருங்கனவு சிதிலமாகி
பிஞ்சுகள் வரிசையில்
பிச்சைப்பாத்திரம் ஏந்தியபோது
எனக்கு படைத்த உணவுகளில்
புழுக்கள் நெளிந்தன....

தலைமகன் வருவான் என்கிறாய் நீ.
விடியலுக்காகவே ! ...
விழித்திருக்கிறேன் நானும்.,
வரிசையில் நிற்கின்ற
பிள்ளைகளின் விரல்களில் வளர்கின்ற
புலிகளின் நகங்களை பார்த்தபடியே.

Sunday 28 March, 2010

அங்காடித்தெரு- என் பார்வையில்


இந்தப்படம் பேசுகிற., பரிமாற்றம் புரிகின்ற செய்திகள்; கண்கள் திரையை விட்டு பிரிந்தபின்னும் அகலாத அதிர்வுகள்.....
கதாபாத்திரங்களையும், காட்சிகளையும் தவிர்த்துவிட்டு பண்பியல்கலையில் இந்த சிறியபார்வை.

நாம் தினம்தினம் சாலைகளில் மரணத்தை உரசியபடிசெல்லும் போதும்., நொடிகளின் அதிர்ஷ்டத்தில் நாம் உயிரோடு இன்னும் பயணிக்கிறோம் ... ஆனால், அதிர்ஷ்டம் கைகொடுக்காத தருணங்களில்-அழகிய கூடுகளை சின்னாபின்னமாக கலைத்துவிட்டுப்போகும் விபத்துகளையும் ;
அதன் கோரப்பற்களில் தன் எதிர்காலங்களை பறிகொடுக்கும் தருணங்களில்., தன் சிறகுகளை முடக்கிக்கொண்டு தான் அடைக்கப்பட்ட கூண்டுக்குள் புதுவானம் அமைத்துக்கொள்ளும் சகமனிதர்களையும்;
காசு தேடுகிற வேகத்தில் மனிதம் மிதித்து பணமீட்டுகிற ஈரமற்ற வர்க்கதுவத்தையும்;
உலகை எதிர்கொள்ள இருக்கவேண்டிய பெண்மையின் தைரியத்தையும்;
வாழ வழி தேடும் மனிதர்களுக்கு உழைப்பின் வேர்களையும்:
நம் வாழ்வில் நம்மோடு பயணிக்கும் எண்ணற்ற நிஜங்களையும் ;
--பதிவு செய்துவிட்டு ஆழமான காதலையும் அதிர்வோடு பாடம் நடத்திவிட்டு வானை நோக்கி விலகி சென்று நமக்குள் ஒரு இருக்கை பிடிக்கிறது அங்காடித்தெரு.

ஆல்பம்... வெயில்....அங்காடித்தெரு என அழுத்தமாய் தன் சுவடுகளை பதித்து விட்டு சினிமாவின் பதிவேடுகளில் பயணம் செய்கிறார் இயக்குனர் வசந்தபாலன்.
கைகோர்த்து நடந்திருக்கிறது கலையும் காமெராவும்...
வார்த்தைக்கு வார்த்தை மிளிர்கிறார் ஜெயமோகன்.
'அவள் அப்படியோன்றும் அழகில்லை' பாடல் காலம் தாண்டும்.
நகரம் நோக்கி நகரும் கிராமத்தை யதார்த்ததோடு படம் செய்த இயக்குனர். என்பார்வையில்... முடிவின்முக்கிய கதைக்களத்திற்கு அழைத்து செல்லும் பாடலில் சிறிது கவனம் தவறிவிட்டார்.

இதுபோல் படங்கள் தமிழ்சினிமாவின் வரங்கள்.