Tuesday, 31 August 2010

நீதிதேவதை உறங்குகிறாள் !

நீதிமன்றங்களின்  இன்றையநிலை என்ன?
வெட்கக்கேடு.
உண்மையைச்சொன்னால்  .,  நீதித்துறை இன்று அரசின் மற்றொரு கைப்பாவை.

நம்பிக்கையின் கடைசிதீர்வாக இருக்கவேண்டிய நீதித்துறை இப்போது தன் சுயகவுரவத்தை இழந்து நிற்கிறது.
ஜனநாயகத்தின் முக்கியத்தூணாக கருதப்பட்ட நீதித்துறை, இப்போது வெறும் பொம்மை அமைப்பாக மாற்றப்பட்டுவிட்டது.

தருமபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று பேருக்கு தூக்கை உறுதி செய்யும்போது உங்களுக்குள் பளிச்சென ஏற்படும் நீதித்துறை மீதான நம்பிக்கைகளை  போபால் விஷவாயு தீர்ப்புகள் போன்றவை அடியோடு எரித்துவிடும்.

நீதித்துறை ஏன் இந்த இழிநிலைக்குள் சென்றது?
பலகாரணங்கள் உண்டு...
நீதித்துறை என்றால் சாமானிய மனிதனுக்கும் முதலில் வரும் எண்ணம் என்னவென்றால்-காலதாமதம் மட்டுமே.
"DELAYED JUSTICE IS DENIED JUSTICE " அதாவது,
" தாமதிக்கப்பட்ட நீதி என்பது  மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் " எனும் வாசகம் நீதித்துறை அரிச்சுவடிகளில் ஓன்று.

கட்டைபஞ்சாயத்துகள் பெருகிபோனதற்கும், மக்களுக்கு நீதித்துறை மீதான நம்பிக்கைகள் குறைந்து போனதற்கும் இந்த காலதாமதம் மட்டுமே முக்கிய காரணம்.
ஏன் இந்த காலதமாதம்., யார் இதற்கு காரணம்?
நாங்களும்,நீங்களும், அரசும்.

 பாரதி சொல்வான் "நான் ஒரு கவிஞன்; என் தொழில் எழுத்து" என்று.
நான் இங்கு ஒரு பதிவராக உங்களோடு கைகோர்த்து நடந்தாலும் , எம் தொழிலால் நான் ஒரு வழக்கறிஞன், ஆகவே நாங்கள் எனும் பதம் தேவையாயிற்று. 
இந்த தொடர் படிக்கும் நீங்கள் மட்டுமே இங்கு நீதிபதிகள்... நீங்கள்தான் என் எழுத்தின் நேர்மையை எடைபோடவேண்டும்.
இத்தொடரில், எம்மை நியாப்படுத்தும் கேடயவார்த்தைகள் வரலாம், அது எம் தரப்பின் நியாயத்தை எடுத்து வைக்க மட்டுமே.
அதற்காக,
தேவையற்ற சப்பைக்கட்டுகள் இருக்காது என்பதை உறுதிசெய்கிறேன். ஏனெனில், நான் கொண்ட வேடம் இத்தொழில் ஆகினும், மானுடம் பேணும் மகத்துவம் அறிவேன்.

சேவைத்தொழில் என்று சொல்லபடுபவை இரண்டு;
ஓன்று..மருத்துவம்
மற்றொன்று ., சட்டத்தொழில்.
ஆனால்  இரண்டும் பாதை மாறி பல வருடம் ஆகிவிட்டது.
மற்ற தொழில்களை போலவே பணம் மட்டுமே இன்று பிரதான இலக்கு.

காந்தியடிகள் சொல்வார் வணிகநிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்களே தெய்வம் என்று. ஒவ்வொருதொழிலுக்கும்  அப்படியே.,
வக்கீல்கள் தன் கட்சிகாரர்கள் விருப்படியே செயல்படமுடியும். அதுதான் தொழில்நேர்மை. வழக்கறிஞர் தொழிலில் தவறு என்று ஒன்றை மட்டுமே குற்றம் சொல்ல வேண்டும்.,  தன் கட்சிக்காரன் எப்படி பட்டவனாக இருந்தாலும் எதிர்த்தரப்போடு உள்ளுக்குள் கைகோர்க்க கூடாது. அதுமட்டுமே வழக்கறிஞர் தொழிலில்  நேர்மை. அதைவிடுத்து, பொதுஜனங்களில் பலர் பேசுவதைப்போல் அவருக்கு  இவர் அப்பியர் ஆகி இருக்க கூடாது, அந்த கேச எடுக்க கூடாது., இந்த மாதிரி வழக்கில் வாதாட  கூடாது என்று சொல்வது போல் அல்ல.  THE ADVOCATES ACT என்று வழக்கறிஞர்களை நெறியுருத்தும்  சட்டம் உண்டு (சட்டங்கள் இயற்றுவது வழக்கறிஞர்களோ,நீதிமன்றமோ இல்லை - அந்த வேலை பாராளுமன்றத்தின் பணி )  அது தன்னிடம் வரும் கட்சிக்காரர் எப்படிப்பட்டவராக இருந்தாலும் அவருக்கு வழக்கறிஞர் மறுக்காமல் வழக்காடவேண்டும் என்கிறது.

பொதுவாக குற்றவழக்குகளில்., இந்தமாதிரி வழக்குகளை ஏன் இவர்கள் எடுக்க வேண்டும் என்று பரவலான கேள்வி வழக்கறிஞர்கள் மீது  உண்டு., வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவன் உண்மையில் குற்றம் செய்தவனா அல்லது அப்பாவியா என்று தீர்மானிக்கவேண்டியது நீதிபதிகளின் வேலை. அது வழக்கறிஞர்களுடையது அல்ல.
நீங்கள் வாதாடாமல் விட்டால்  குற்றவாளிகள் எப்படி தப்பிக்கமுடியும் என்று உங்களுக்கு நியாமான கேள்வி எழலாம். உண்மையே., தயவுசெய்து குற்றம்சாட்டபட்டவர்கள் எல்லோரும் தவறு இழைத்தவர்கள்.,தண்டனைக்குரியவர்கள் என்று அவசர முடிவுக்குள் செல்லாதீர்கள்.
பணம்,செல்வாக்கு படைத்தவர்களோடு உங்களுக்கு எப்போதாவது பிரச்சனை நேரிட்டால் அப்போது உணர்வீர்கள்....குற்றம்சாட்டப்படுபவர்கள் எல்லோரும் குற்றவாளிகள் இல்லை என்று.

"கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவையில்லை" எனும் மாதிரி சிலவழக்குகளில் வழக்காடுவதை பற்றிய ஏன் என்ற உங்கள் நியாமான கேள்விகளை  எங்கள் நெஞ்சம் அறியும்.
ஒன்றை அறியுங்கள்...வழக்கறிஞர்கள் வானில் இருந்து குதிக்கவில்லை., உங்களைப்போன்ற ஒரு குடும்பதிலிருந்துவே வந்துள்ளனர்.
சாதாரண ஆசாபாசாங்கள் ஆட்டிபடைக்கும் மனமே எங்களுக்கும்.
"கண்களுக்கு முன் திறக்கப்படும் பெட்டிகள்., பலநேரங்களில் எங்கள் இதயகதவுகளை  அறைந்து சாத்திவிடும்".
 நீங்கள் நினைப்பது மாதிரி எல்லோரும் அப்படி அல்ல., காந்தியும், காஸ்ட்ரோவும்,நேரும் , வ உ சி யும் இங்கிருந்து வந்தவர்களே.
எங்கெல்லாம் மக்கள் விரோத செயல்கள் காணப்பட்டாலும் அதை எரிக்கும் நெருப்பின் பொறி ஆரம்பத்தில் இங்கெழும்.

எங்களில் ஒருவர், ஒரு கண் தெரிந்த குற்றவாளிக்கு ஆஜராகும்போதே, அதே குற்றவாளி நீதிமன்ற வாசலில் உணர்ச்சிப்பெருக்கில்  பலவழக்கறிஞர்களால்  தாக்கப்படுவதை உங்களுக்கு பலநேரங்களில் ஊடகங்கள் உறுதிசெய்யும்.

சரி விசயத்திற்கு வருவோம்.,

"வாய்தாராணி" என்று ஜெயலலிதாவிற்கு சமீபத்தில் திமுக பட்டம் அளித்து பெருமை படுத்திய அளவிற்கு எல்லோர்க்கும் எளிதில் புரியும் சொல் "வாய்தா".
 
எங்களில் சிலபேருக்கு "வாய்தா வக்கீல்" என்று பெயரே உண்டு.

இதற்கு நாங்கள் மட்டுமல்ல நீங்களும், அரசும் காரணம்., எப்படி...?



                                                                                           இன்னும் பேசுவோம்...


.

1 comment:

யோகா.... said...

மக்கள் எப்போதெல்லாம் அரசுதான் எல்லாம் செய்யவேண்டும் என எண்ணுகின்றனர். ஆனால் வாக்கு சீட்டுக்கு பணம் வாங்கிகொண்டு ஆட்சியையே அரசியல்வாதிகளிடம் விற்று விடுகின்றனர். பின்பு எங்கிருந்து வரும் நீதி நேர்மை எல்லாம்

Post a Comment