Wednesday, 29 December, 2010

"சிதிலமடையும் தேவதை"

"வரங்களே சாபங்கள் என்றால்.,
 தவங்கள் எதற்காக ?"
                                        - கவிக்கோ அப்துல் ரஹ்மான்.


அப்பாவி இந்தியர்கள் நம்பும் ஜனநாயக தெய்வங்கள் எல்லாம் தங்கள் வீட்டு விலாசம் மட்டுமே அறிந்தவை.
 ஆளுபவனும்., அதிகாரம் செலுத்துபவனும்., கேள்வி கேட்கவேண்டுபவனும் தங்களுக்குள் உள்ள பரிமாற்ற பிணைப்பினால்  இஷ்டம்போல் திளைக்கிறார்கள்.

" கொடுமை...கொடுமை... என்று கோவிலுக்கு போனால் அங்கும் ஒரு கொடுமை தலை விரித்து ஆடுமாம்". எனும் வகையில் சில  வழக்குகளின் தீர்ப்புகள் "சிலநேரங்களில் சிலமனிதர்களால்" இரவுவிடுதிகளில் அச்சாரம்  இடப்படுகிறது என்று நீதிமன்றங்களில் பேச்சு உண்டு . ( பல நேரங்களில் நல்ல நீதிபதிகளின் மீதும் வழக்கை தோற்ற வக்கீல்கள் பழிப்போட்டு தங்களை காத்துக்கொள்வார்கள் ) ஆனால்.,அந்த பேச்சை முற்றிலும் உதறித்தள்ள முடியாது.

முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி(?)களாக இருந்த ஏ.எஸ்.ஆனந்த் , கே.ஜி.பாலகிருஷ்ணன் மீதான சொத்து குவிப்பு குற்றச்சாட்டுகளும் அவை மக்களின் பார்வைக்கு வந்ததையும் ., .
கர்நாடக தலைமை நீதிபதியாக இருந்த பி.டி.தினகரனின் மீதான நூற்றுகணக்கான ஏக்கர் விளைநிலம் சேர்ப்பும்.,
 நீதிபதி சென் மீது பதவி பறிப்பதற்கான பாராளுமன்ற நடவடிக்கை முயற்சி... இப்படி பல.
அதன் விளைவுகள் எப்படியோ!  யாம்  அறியோம் .
( இந்த நாட்டில்.," வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என்பதை இங்கு  நினைவில் கொள்வது - ஏமாற்றங்களை தாங்க உதவும் .)

"ஓய்வுப்பெற்ற பதினாறு முன்னாள் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதிகளில் நிச்சயமாக எட்டு பேர் லஞ்ச ஊழலில் தொடர்பு உள்ளவர்கள்" என்று வழக்கறிஞர் சாந்திபூசன் கூறுகிறார்.
இக்கூற்றுகளை முழுக்க உதறமுடியாத வகையில் .. நீதிமன்ற ஊழல்களைப்பற்றி மனித உரிமை காவலர், ஓய்வு பெற்ற நீதியரசர் வீ.ஆர்.கிருஷ்ணையர் தனது வேதனையாக தனது சுயசரிதையில் பதிவு செய்துள்ளார் .

அதிகாரத்தை பயன்படுத்தி தனது குடும்பத்திற்கு சுற்றுலா சுக அனுபவம் ஏற்பாடு செய்ய., அதுவே, ஒரு பெண் நீதிபதிக்கு தாங்க முடியாத உஷ்ண நாட்களாக எதிர்காலத்தை மாற்றிவிட்டது. இங்கு கவனிக்க!...பெண் நீதிபதி என்று வலிய குறிப்பிட்டது 'மனிதனின் பேராசைக்கு ஆண்பெண் பேதமில்லை' என்பதற்கே.

நம் நீதித்துறை ஒரு விசித்தரமான நடைமுறையை தவறான போக்கை ஊழல் நீதிபதிகளிடத்தில் கொண்டுள்ளதாக உணரமுடியும்.  திடீரென்று ஊழல் நீதிபதிகள் தன்னிச்சையாக ஓய்வு பெற்று இருப்பார்கள். விசாரித்தால் அண்ணாச்சியின் மீது பிடி இறுகி வெளியேறியதாக சொல்வார்கள்.  "நீதித்துறையின் மீது  மக்களின் நம்பிக்கை முற்றிலும் தகர்ந்து
போக கூடாது!  மக்கள், நீதி கிடைக்கும் என்ற திடமான  நம்பிக்கையின் அடிப்படையிலாவது., வன்முறையை நாடாமல் இருக்கட்டும்!!" என்று லஞ்ச லாவண்யங்களில் மிதக்கும் நீதிபதிகளை
" மகனே! ஒழுங்கு மரியாதையாக நீயே வீட்டுக்கு போ..."  என எச்சரித்து தெருவாசல் கதவு அவர்களுக்கு கை காட்டப்படுவதாக (?) சொல்லப்படுகிறது .  அது உண்மையென்றால்...ஊழல் அதிகாரிகளும், அரசியல் வாதிகளும் பதவியை விட்டால் மட்டும் போதுமே?.
சரி.,நாம் தொடர்வோம் ..அப்படி எச்சரித்தும் காதில் ஏற்றிக்கொள்ளாத  காரிய செவிடுகள் அப்போதும் .,  " நமக்குதான் அவர தெரியுமே! இவுங்க என்ன செய்ய முடியும்?"
என்று  படு மேதாவித்தனம் புரியும்போது  மட்டுமே இந்த பெண் நீதிபதியை போல், தன் சொந்த செல்வாக்கின் மீதான  நம்பிக்கையால்  செய்திதாள்களுக்கு வருகை புரிகிறார்கள்.

இந்தியா சுதந்திரம் பெற்றபோது தன் சொத்துகளை இழந்து சேவைபுரிந்து ...
 அதன் அடிப்படையில் மட்டுமே சுமார் 85
விழுக்காடு அளவிற்கு முதல் பாராளுமன்ற மந்திரி சபையில் இணைந்து நேர்மையுடன் நாட்டு நலனில் வழக்கறிஞர்கள் பங்கேற்றது அந்தகாலம் என்றால்...
இப்ப...மொத்த இந்தியநலனையும் வீட்டுக்கு கொண்டுவந்த நம்ம இனமான(?) ராசாவும் வக்கீலுதான்.


வேலியே பயிரை மேய்ந்தால் வெள்ளாமை வீடு சேருமா?
நம்பியவனே கழுத்தை அறுக்கும் போது., அரசாங்கங்கள் சுரண்டல் அமைப்பானபோது அதை தடுத்து மக்களுக்கு அரணாக இருக்க வேண்டியே நீதிபரிபாலனை மன்றமும் கோரைப்பற்களோடு குருதி சொட்ட நிற்கிறது.

கேள்விகேட்கவேண்டியவனே குற்றவாளி கூண்டில் நிற்கும் போது நீதி வெட்கி தலைகுனித்து வெளியேறவேண்டிய கட்டாயம் உள்ளது.  அது சிலநேரங்களில்
அணைப்பவர்களின் கைகளை சென்றடையும் போது அது தீவிரவாத முகவரியாகிடுகிறது.

பெருமைக்குரிய அலஹாபாத் உயர் நீதிமன்றத்தை சமீபத்தில் உச்சநீதிமன்றம்
 " அங்கு ஏதோ அழுகி உள்ளது " என்று குற்றம் சாட்டும்போது...
 வெறுமனே அதனை உயர்ந்த நீதிபரிபாலனை அமைப்புகளிடையே ஏற்பட்ட சண்டையாக மட்டுமே ஊடகங்கள் பார்கின்றன .
உண்மையில் அவை  .,  எல்லா இடங்களிலும் உள்ள சத்தியத்திற்கும,.அநீதிக்கும் இடையே ஆன உச்சகட்ட உரசலின் வெளிப்பாடே .

நீதிமன்றகளின் மாண்பு அதன் இருக்கையில் அமரும் தனிப்பட்டவர்களை பொறுத்தே அமையும்.
அது காலத்திற்கு காலம் அமருபவர்களை சார்ந்து புகழையும்  ., இகழ்வையும் அடையும்.

"விதைகளை தரமற்றதாக தேர்ந்தெடுத்து விட்டு...பலன்களை வீரியமாக எதிர்நோக்குவது"  மூடர்களின் எதிர்பார்ப்பே அன்றி வேறு எதுவாகவும் இருக்க முடியாது.
சட்டக்கல்வியை நோக்கி  அதில் நுழைபவர்களில் பலர் சமூக நோக்கமற்றவர்களாக இருக்கும் போது எங்கு நாம் எதிர்கால நீதியை
தேடுவது ?
                               -நீதி தேவதையின் நான்காம் ஜாமத்து உறக்கம் தொடரும்...