Tuesday, 12 October, 2010

"வாழ்வாங்கு வாழட்டும் ஊழல்"ஜன்னல் தாண்டி சூரியன் தன் கதிர்களை பிரவேசிக்கும் முன்பே சிணுங்க தொடங்கிய கைபேசி., இரண்டாம்முறையும் தொடர்ந்து ஒலித்தது...பின்னிரவிற்கு கொஞ்சம் முன்னர் மட்டுமே படுக்கைக்கு போனதால் விழிகள் பிரிக்க இயலா நித்திரையை சிரமத்தோடு அகற்றி கைபேசிக்கு செவிமடுக்க...

"ஹலோ, வணக்கம் சார்., நான் ராஜசேகர், ஹலோ FM லிருந்து...இன்றைய தினசரிகளில் உச்சநீதிமன்றம் அரசு அலுவலங்களில் லஞ்சதொகையை நிர்ணயிக்க சொல்லி தன் வேதனையை வெளிப்படுத்தி இருப்பதைப்பற்றி முக்கிய செய்தி வந்துள்ளது., இதை பற்றி உங்களுடைய கருத்து என்ன?"  
  ( அந்த செவிமடல் கிழே இணைக்கப்பட்டுள்ளது )

வார்த்தைகளுக்கு செவிகொடுத்த வண்ணம், கதவைத்திறந்து வெளியே காத்திருந்த செய்திதாளின் மடிப்பை கலைத்து விழிகளை மேயவிட்டப்படியே பேசுகிறேன்.., கூடவே நினைவு அலமாரியிலிருந்து பக்கங்களை புரட்டியபடி...
பத்து நிமிடங்களில் அந்த செவிமடல் முடிந்தது. ஆனால் நினைவின் பக்கங்கள் கொஞ்ச நேரம் படபடத்தபடி இருந்தது.

ஏன் உச்சநீதிமன்றம் இப்படி தன் உச்சக்கட்ட வேதனையை வெளிப்படுத்தியது., ஏன் இந்த நையாண்டி.... எதற்காக இந்த நயம்பட வசைபாடுதல்?
சரி. இந்த கருத்தை சொன்ன நீதிபதி யார்? அவரின் யோக்கியாம்சம் என்ன? ஏனெனில், வார்த்தைகள் அதைக்கூறிய மனிதரை பொறுத்தே மகத்துவம் அடையும்.


இன்று இந்தியாவில் ஊழல் ஒரு மிகச் சாதாரணமான ஒரு விஷயமாகிப் போய் விட்டது. ஊழலைப் பொறுத்தவரை நமக்கு மிக அதிகமான சகிப்புத் தன்மை வளர்ந்து, ஊழலை ஒரு பொருட்டாகவே நாம் கருதாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறது.இந்த ஊழல்களில் சம்பந்தப்பட்ட நபர்கள், கட்சி வித்தியாசங்களை கடந்து அனைத்து கட்சிகளிலும் உள்ளனர். தேர்தலை சந்திக்கவும், கட்சித் தாவும் எம்எல்ஏ எம்பிக்களை விலைக்கு வாங்கவும், கருப்புப் பணம் பயன்படுவதால், ஊழலில் ஊறித் திளைக்க அரசியல் கட்சிகள் அஞ்சுவதே இல்லை.

ஊழலில் பெருமளவில் எப்போதும் தப்பித்துவிடும் விலாங்குமீன்கள் நம் அதிகாரவர்க்கம். . .
கடைகோடி கிராமநிர்வாகத்திலிருந்து.,குடியரசு மாளிகை வரை வேர்விட்டு விழுதுவிட்டு அடர்ந்து தளைத்து நிற்கும் இவர்கள் பிறப்பிலிருந்து மரணம்வரை நம்மை நிழலாய்...ஊழல் உருவாய் துரத்துகின்ற ஓநாய் வர்க்கம்.
அரிதிபெருமளவில் மக்கள் மனநிலையில் மாற்றம் வந்திருக்கிறது.
மக்கள் தன்னை ஆள்பவர் யார் என்று தீர்மானிக்க பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கிற அளவிற்கு லஞ்சம் புரையோடி விட்டது.

பக்கத்துக்கு வீட்டில் வேலைக்குசெல்பவனை குறைசொல்லும் இதேசமுதாயம்..தன் பிள்ளைக்கு உத்தியோகம் கிடைத்தால் "பிழைக்க தெரியாம இருந்துடாதே!" என்று புத்தி சொல்லி அனுப்புகிறது.

வாழ்க வையகம்.