Saturday 25 September, 2010

ஒரு உயிர் இரு மரணம் - "திலீபா"ஞ்சலி !

திலீபா !....
உமக்காக .,
ஊமைகள் அழுகிறோம்!!
இதயமற்ற  தேசத்திலிருந்து...

கால்நூற்றாண்டிருக்கும் .,
காந்தியம் புதைக்க எழுப்பபட்ட 
கல்லறையின் முன்பு
தேசமென கருதி நீ கைதொழுதாய் !
நெருப்பை நீர் கொண்டு அணைக்க 
உன் ஊன் உருக்கி
பெருமடல் எழுதினாய்!

செவிப்பறைகள் கிழிய
நீ எழுப்பிய அழுகுரல்
உலகெங்கும்  ஒலித்தது!
என் இதயமற்ற தேசத்தின்
செவிகள் ஏற்கனவே இறந்திருந்தது.

நீ  துப்பாக்கியில்
ரோஜாக்களை நிரப்பி 
புறாக்களை ஏந்தினாய!

புத்தன் பிறந்த என் தேசமோ
சிறகுகளைகொய்து
சமாதானத்தை புதைத்தது.


காந்தி வணிகப்பெயர் பார்த்து 
வாழ்ந்தபிணங்களிடம்  வரங்கேட்டாய்!
தீர்மானிக்கப்பட்ட சாபங்களுக்காக 
உன் உயிர் காணிக்கையாக்கப்பட்டது.

மெல்ல நீ இறந்து கொண்டு இருந்தாய்...
காந்தியம் அடைக்கத் தயாராகிய 
சவப்பெட்டியின் மூடியில்
ஒவ்வொரு நாளும் ஒரு ஆணி
அறையப்பட்டுக்கொண்டிருந்தது.

நெருப்பு
நீரை எரித்தது!
முழுவதுமாய் ஒருநாள் நீ எரிந்துபோனாய்.

 உன் உயிர்பிரிந்த நாளில் ...
 முழுவதுமாய்இறந்து கிடந்தது -
 நீ  ஆதரித்த
அனாதை காந்தியமும்.

உன் வித்துடல்
ஊர்வலமானபோது
காந்தியம் சவப்பெட்டியில்
மூடப்பட்டிருந்தது.

2 comments:

அன்பரசன் said...

உருக்கமான கவிதை

Unknown said...

சரிதான்.ஆனால், ஊமையாய் அல்ல!
நெளிகிறோம் புளுக்களாய்
சாக்கடையில்...

Post a Comment