Thursday, 30 September, 2010

அய்யோத்தீ தீர்ப்பு ! -- ஒரு மீள் பார்வை ( நீதி தேவதை உறங்குகிறாள் - 2)

கயிறு மேல் நடந்து கடக்கிற செப்படி வித்தையை கனகச்சிதமாக செய்துள்ளது அலகாபாத் உயர்நீதிமன்ற லக்னோ அமர்வு.

அறுபது வருட நகர்வு ஒரு முடிவின் ஆரம்பத்திற்கு இந்தியாவை இழுத்திருக்கிறது.

உயர்நீதிமன்றத்திற்கும், உச்சநீதிமன்றத்திற்கும் அரசியல் அமைப்பால் வழங்கப்பட்டுள்ள உயரிய அதிகாரமே நீதிபேராணை.... மற்ற உயர்நீதிமன்றங்களை விட அதன் ஆற்றலை அதிகம் பயன்படுத்திய ஒரே உயர்நீதிமன்றம் அலகாபாத் உயர்நீதிமன்றமே, அதன் தீர்ப்புகள் எப்போதுமே அரசுகளுக்கு அச்சத்தையே இதுவரை கொடுத்துவந்துள்ளன.  அதன் பலதீர்ப்புகள் இந்தியாவின் கீழ்நீதிமன்றகள் பலவற்றில் வழிகாட்டுதலுக்கு பயன்படும் ஆவணங்கள்.
இந்தியாவிற்கு ஒரு எமெர்ஜென்சி வந்ததே இந்த பெருமைக்குரிய அலகாபாத் நீதிமன்றம் இந்திராவின் தேர்தல் முடிவு செல்லாது என அறிவித்ததுதான். அதனை  தொடர்ந்து இந்திராகாந்தி அரசாங்கம்  ஏற்படுத்திய எமெர்ஜென்சி  எனும் அமளிதுமளி (என்னபெயர் சொல்லி காங்கிரஸ்காரர்கள் அழைத்தாலும் அது  ஜனநாயக படுகொலை -     இப்போதைய அரசியல் தரங்கெட்டவர்களால் அந்த படுகொலைகூட  பரவாயில்லை எனும் அளவிற்கு எமெர்ஜென்சி கூட  நியாப்படுத்தபட்டுவிட்டது ) . அயோத்தி தீர்ப்பின் விளைவால்  என்னஎன்ன  நடக்குமோ என பத்திரிகைகள் பரபரப்பு ஜோசியங்கள் கூறிக் கொண்டிருந்தன. தொலைகாட்சிகளோ ஊகங்களால் பிரித்து மேய்ந்து கொண்டுஇருந்தார்கள்.சில மாநிலங்கள் விடுமுறை விட்டது மாதிரி., தனியார் நிறுவனங்கள் மதியமே தன்னை துடைத்து வைத்துகொண்டு எதிர்வினையை பொறுத்து நாளைய  அலுவல் தீர்மானிக்க முடிவு செய்து  இந்தியர்களை ஜுரம் பிடிக்க வைத்தார்கள். 

எல்லா எதிர்பார்ப்புகளையும் மீறி  இரண்டு இந்துக்களும் ஒரு முஸ்லிம் என காணப்பட்ட லக்னோ அமர்வின் தீர்ப்பும் 2 :1 என்ற அளவில்  "அடடா நல்ல சான்சு நழுவி போய்சே!" என வழக்கில் ஈடுபடாதவர்களை வருந்த செய்கிற அளவிற்கு எல்லோருக்கும் பங்கிட்டு கொடுத்து பெருந்தன்மை காட்டி,   முதல் முறையாக அரசாங்கத்திற்கு நெஞ்சில் பால்வார்த்திருக்கிறது அதே அலகாபாத் உயர்நீதிமன்றம்.

பிரச்சனை இல்லாமல் முடிந்தால் போதும் என்று நினைக்கும் மனநிலையில் நின்று விட்டதோடு அல்லாமல்,
தீர்ப்பு சொல்லப்பணிக்கப்பட்ட அமர்வு கடைசியில் மறைமுக சமரசத் தீர்வு சொல்லி இளைப்பாறிவிட்டது.

முஸ்லிம் வக்பு வாரியம் தன் வசம் வைத்திருந்த ஏறத்தாழ அரை ஏக்கர் நிலத்தையும் அரசாங்கம் கையகப்படுத்தி வைத்திருந்த சுமார் இரண்டரை ஏக்கரையும், மூன்றாக பிரித்து 1 : 1: 1 என வழக்கு தரப்பினர் மூவருக்கு பங்கிட்டு கொடுத்துவிட்டு நீதிபதிகள் மூவரும் தங்கள் சொந்த கருத்துகளை அவர்களுக்குள் ஏற்பட்டிருந்த தாக்கத்தின் அளவிற்கு வெளியிட்டு இருந்தார்கள்.

"பாபரின் உத்தரவின் பேரில் கோயிலை இடித்துத்தான் மசூதி கட்டப்பட்டது பாபர் மசூதியின் மொத்த வளாகமும் இந்துக்களுக்கு உரியது. அதுதான் இராமன் பிறந்த இடம்,  இது இசுலாமியக் கோட்பாடுகளுக்கு எதிரானது என்பதால், அந்தக் கட்டிடத்தை மசூதி என்றே கருத இயலாது. அதன்மீது முஸ்லிம்களுக்கு (சன்னி வக்ப் போர்டுக்கு) எந்த உரிமையும் இல்லை”    -- நீதிபதி சர்மா தீர்ப்பின் சாரம்.


”இராமன் பிறந்த இடம் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் அங்கே இந்துக்கள் வெகு நீண்ட காலமாக வழிபட்டு வருகிறார்கள். எனவே மசூதிக் கட்டிடத்தின் மையப்பகுதி இந்துக்களுக்கு சொந்தமானது. இஸ்லாமியக் கோட்பாடுகளின் படி அது ஒரு மசூதி அல்ல என்ற போதிலும் சர்ச்சைக்குரிய கட்டிடத்தின் உள் தாழ்வாரம் இரண்டு பகுதியினராலும் வரலாற்று ரீதியாகவே வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. எனவே, தற்போது ராமன் சிலை வைக்கப்பட்டுள்ள மையப்பகுதி இந்துக்களுக்கு தரப்படவேண்டும். தாழ்வாரம் உள்ளிட்ட மொத்த இடம் மூன்றாகப் பிரிக்கப்பட்டு ராமஜன்மபூமி நியாஸ், சன்னி வக்ப் போர்டு, நிர்மோகி அகாரா ஆகியோர் மூவருக்கும் தரப்படவேண்டும்.” -- இது நீதிபதி அகர்வால் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

”சர்ச்சைக்குரிய இடம் பாபரால் அல்லது பாபரின் ஆணையின் பேரில் கட்டப்பட்ட மசூதி. ஏற்கெனவே இடிபாடுகளாக இருந்த ஒரு இடத்தின் மீது அது கட்டப்பட்டிருக்கிறதே அன்றி, கோயிலை இடித்து கட்டப்படவில்லை. அங்கே மசூதி கட்டப்படுவதற்கு நெடுநாள் முன்னதாகவே அந்தப் பரந்த பகுதியின் ஏதோ ஒரு சிறிய இடத்தில்தான் இராமன் பிறந்திருக்கிறார் என்ற நம்பிக்கை இந்துக்களிடம் நிலவியது. குறிப்பாக இந்த இடம் சுட்டிக்காட்டும்படியான கருத்து இந்துக்களிடம் நிலவவில்லை. ஆனால் மசூதி கட்டப்பட்ட சில காலத்துக்குப் பின்னர், இந்த இடத்தில் தான் ராமன் பிறந்தார் என்று இந்துக்கள் அதனை அடையாளப்படுத்த தொடங்கினர். 1855 இல் ராம் சபுத்ரா, சீதா ரசோய் என்ற கட்டுமானங்கள் அங்கே உருவாக்கப்படுவதற்கு முன்னரே மசூதியின் சுற்றுச்சுவர் அருகே இந்துக்கள் வழிபாடு செய்து வந்தனர். மொத்தத்தில் இரு தரப்பினருமே சர்ச்சைக்குரிய இந்த வளாகத்தில் வழிபாடு செய்து வந்திருக்கின்றனர்.
ஆனால் குறிப்பிட்ட மொத்த இடத்தின் மீதான தங்களது தனிப்பட்ட உரிமை (TITLE ) குறித்த எந்த ஆவணத்தையும் இரு தரப்பினராலும் தர இயலவில்லை. பகுதி அளவிலான உரிமையை நிலைநாட்டும் ஆவணங்களும் இருதரப்பினரிடமும் இல்லை. இது இரு தரப்பினருடைய அனுபவ பாத்தியதையாகவே இருந்து வந்துள்ளது. 1949 இல் அங்கே ராமன் சிலை வைக்கப்பட்டிருக்கிறது.
மேற்சொன்ன நிலைமைகளைக் கணக்கில் கொண்டு மையமண்டபத்திற்கு கீழே உள்ள பகுதி இந்துக்களுக்கு தரப்படுகிறது. மொத்த வளாகமும் மூன்றாகப் பிரிக்கப்பட்டு மூன்று பேருக்கும் வழங்கப்படவேண்டும்.” --நீதிபதி கான் அளித்துள்ள தீர்ப்பின் சாரம்.

ஒருவேளை, மூன்று சீக்கிய நீதிபதிகளோ அல்லது மூன்று கிறித்துவ நீதிபதிகளோ அமர்வில் இருந்திருந்தால் வேறுமாதிரி கருத்துகளும், தீர்ப்பும் மாறி இருக்குமோ என்னவோ.

திர்பளித்த நீதிபதிகள் இந்நேரம் நீண்டநாட்களுக்குப்பிறகு நிம்மதியாக உறங்கிகொண்டிருப்பார்கள்.,
நீதிதேவதையைப்போலவே......                                          

                                                                                                         இன்னும் பேசுவோம்...3 comments:

mkkannaa said...

உபயோகமான செய்தியாக அமைந்தது.இனியும் வேணும் விவரம்...

கே.ஆர்.பி.செந்தில் said...

//என்னபெயர் சொல்லி காங்கிரஸ்காரர்கள் அழைத்தாலும் அது ஜனநாயக படுகொலை - இப்போதைய அரசியல் தரங்கெட்டவர்களால் அந்த படுகொலைகூட பரவாயில்லை எனும் அளவிற்கு எமெர்ஜென்சி கூட நியாப்படுத்தபட்டுவிட்டது//

இதனை வழிமொழிகிறேன்..

நம்ம ஊரு நாட்டாமைகள் சொல்கிற தீர்ப்பு மாதிரி இருக்குன்றதுதான் கொடுமையே .. இதுக்கு இத்தனை வருஷம் காத்திருப்பு .. மொத்தத்தில் அரசாங்கம் காப்பாற்றபட்டுவிட்டது ...

விந்தைமனிதன் said...

//திர்பளித்த நீதிபதிகள் இந்நேரம் நீண்டநாட்களுக்குப்பிறகு நிம்மதியாக உறங்கிகொண்டிருப்பார்கள்.,
நீதிதேவதையைப்போலவே......??//

நடுமண்டையில நச்சுன்னு அடிச்ச மாதிரி இருக்கு!

Post a Comment