Monday, 17 May 2010
புத்தனின் ஆசை !...
என் பெயரை சொல்லியே
எல்லாம் நடந்து முடிந்துவிட்டது.
நான் ஞானம் பெற்ற போதிமரத்தின்
கிளை கொண்டுவந்த அந்நியர்கள்;
உன் மண்ணை ஆக்கிரமித்தார்கள்.
நரவேட்டை மறைக்க
கூடாரங்கள் தேவைப்பட்டன;
என் பெயரால்
ஆலயங்கள் அமைத்தார்கள்.
வந்தேறிய அவர்களுக்கு
மண்ணுரிமை கோர
வரலாறு அவசியப்பட்டது ;
மகாவம்சத்தை மாற்றினார்கள்.
எல்லா அவலங்களும்
என்பெயர் சொல்லியே
அரங்கேற்றப்பட்டதால் -
வெலிக்கடையில் கண்கள்
நோண்டப்பட்டபோது
நான் விழிகள் இழந்தேன்;
கர்ப்பிணிகள் வயிறு கிழித்து
சிசுக்கள் சிதைக்கப்பட்டபோது
என் இருதயத்தில் துர்நாற்றம் வீசியது;
வல்லுறவில் பெண்கள் துடித்தபோது
தலைவிரி கோலமாய் என் அம்மா
என் முன்னே தலையில் அடித்துக்கொண்டு
சபித்தபடி மண் அள்ளி எறிந்தாள்.
உன் பெருங்கனவு சிதிலமாகி
பிஞ்சுகள் வரிசையில்
பிச்சைப்பாத்திரம் ஏந்தியபோது
எனக்கு படைத்த உணவுகளில்
புழுக்கள் நெளிந்தன....
தலைமகன் வருவான் என்கிறாய் நீ.
விடியலுக்காகவே ! ...
விழித்திருக்கிறேன் நானும்.,
வரிசையில் நிற்கின்ற
பிள்ளைகளின் விரல்களில் வளர்கின்ற
புலிகளின் நகங்களை பார்த்தபடியே.
Subscribe to:
Posts (Atom)