Saturday 19 June, 2010

எப்போதும் ஏன் போராடுகிறார்கள்?

"உயர்நீதி மன்றத்தில் தமிழ் ஒலிக்க வேண்டும் !"
போராடும் வழக்கறிஞர்களின் கோரிக்கை.
தன் தாய்மொழியில் பேசுவதற்கு நீதிகேட்டு நீதிமன்ற வாசலில் சாகும்வரை உண்ணாநோன்பு... 

இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா?
எப்பபார்த்தாலும் போராட்டம்...கைது., சச்சரவுகள்... போங்கப்பா என்று உங்கள் சலிப்பும் முனகலும் கோபமும் புரிகிறது.



விளக்கப்படாத விசயங்கள் இடைவெளிகளை அதிகமாக்கி இனம்புரியாத வெறுப்பிற்கு அழைத்துசென்று விடும்.
ஏன் இவர்கள் எப்போதும் போராட்டங்களோடு வாழ்கிறார்கள்?


போராட்டங்களை யாரும் விரும்புவது கிடையாது.. ஆனால் போராட்டங்கள் யாரையும்விடுவது கிடையாது.


ஒவ்வொரு மனிதனும் தனக்கான போராட்டங்களை எதிர்கொண்டு தோள் கொடுக்கும்போது அவன் குடும்பத்திற்கு மட்டுமே உரியவன் ., அதே மனிதன் விரிந்து குரல் எழுப்புகிறபோது சராசரி எல்லைகளை தாண்டி உயர்கிறான் .


உலகின் எந்த போராட்டங்கள் ஆகட்டும் ....
அதில் தலைமையேற்ற முக்கியமானவர்கள் வழக்கறிஞர்கள் .
இது அவர்களின் தொழில் காரணமே தவிர வேறில்லை.

ஒவ்வொருவருக்கும் தான் ஈடுபடுகிற தொழிலின் சிக்கல்களுக்கு மூலகாரணம் புரியும்.
அதுபோலவே சமுதாய பிரச்சனைகளுக்கு மூலகாரணம் இன்னவென்று தொழில்ரீதியாக வழக்கறிஞர்கள் அறிய வாய்ப்புகள் மிக அதிகம்.

உடலை மையப்படுத்தி மருத்துவர்கள்;
நேரடி அறிவியலை மையப்படுத்தி பொறியாளர்கள்;
சமுதாயத்தை மையப்படுத்தி வழக்கறிஞர்கள்...இவை தொழில் அமைவு .

அரசாங்கத்தை ஆளும் தனிநபர்களின் எண்ணங்கள் விளைவாக;
முதலாளித்துவ செயல்பாடுகள் காரணமாக;
மக்கள் நலன்களிலிருந்து விலகி தனிநபர்களின் ஆதாயத்திற்கு ஏதுவாக சட்டங்கள் வளைக்கப்படும்போது
அவற்றை தொழில் காரணமாக நுட்பமாக உணர்பவர்கள் வழக்கறிஞர்கள்.
அதன் காரணமாகவே இன்று உலகை ஆளும் அரசியல் தத்துவங்களில் மிக பெரும்பான்மை வழக்கறிஞர்களுக்கு சொந்தமானது. அமைதிவழியில் காந்தி ஆகட்டும் ...ஆயுதபோரட்ட வழியில் காஸ்ட்ரோ ஆகட்டும்.


வழக்கறிஞர்கள் எல்லோரும் சிறந்தவர்கள் என்று பொருள் கிடையாது.. எல்லா தொழிலை விடவும் அதிகமாக குற்றவாளிகளின் பிள்ளைகளும், சில சமுதாய குற்றவாளிகளும் தங்களை பாதுகாத்து கொள்ளவும்,
வேறு தொழில் படிப்பு கிடைக்காதவர்களும் இந்த தொழிலுக்குள் வருகிறார்கள்... ஆனால் அதேவேளை., மற்ற எந்த தொழிலை விடவும் மிக அதிக சமுதாய சிந்தனை உடையவர்கள் இந்த தொழிலை ஆரம்ப வறுமை இருப்பினும் ஏற்கிறார்கள். ஆகவேதான், இயற்கை தலைவர்கள் சிலர் இங்கிருந்து வெளிப்படுகிறார்கள்.


ஈழ போராட்டத்தை தோற்றுவித்தவர்களும்., ஈழப்போர் உச்சம் பெற்றபோது இங்கு தன் வருமானம் இழந்து போராட்டத்தை முதலில் துவங்கி, விடாது தொடர்ந்து., அரசின் தேர்தல் அச்சத்தின் விளைவாக அடிப்பட்டு இரத்தம் சிந்தியவர்களும் வழக்கறிஞர்கள் மட்டுமே.
அரசாங்கத்தை ஆளும் தனிநபர்களின் வீட்டு சொத்தாக ஊடகங்கள் இருந்ததால் ஒருபக்கத்து எதிர்விளைவு காட்சிகள் மட்டும் திருவாளர் பொதுஜனம் கண்களுக்கு காதுகளுக்கு அளிக்கப்பட்டன. அதனால் வழக்கறிஞர்கள் நடத்தியவை மட்டுமே நடந்தது என்பதுபோல அரசாங்க பொய்கள் ஓதப்பட்டன.
அரசாங்கமும் , ஆராயதவர்களும் மட்டுமே குற்றம் சாட்டினார்கள் . ஆனால்., வழக்கறிஞர்கள் பற்றி ஒப்பில்லாத முத்துக்குமார் உணர்ந்தார். ஆகவேதான் தன் உடலை தன் கோரிக்கைகளை பத்திரமாக கொண்டுசேர்க்க கோரினார். அதை உணர்வாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் வசம் சேர்த்தார். அந்த சான்றிதழ் போதும்! வேறு வேண்டாம்.

இப்போது நடைபெறும் இந்த தாய்மொழி நீதிமொழியாக கோரும் போராட்டம் ஏன்?தன்மண்ணில் தன்மொழிபேச போராட்டம்., மக்களுக்கான அரசாங்கம்., மக்களுக்கான நீதிமன்றங்கள்., மக்களுக்கான சட்டங்கள் எனும்போது ஏன் மக்களின் மொழி அங்கு பேசப்படகூடாது.

உண்மையில் இது மக்கள் கையில் ஏந்தவேண்டிய போராட்டம்., மக்கள் ஊமைகளாக அரசாங்கத்தை எதிர்க்க துணிவற்றவர்களாக இருப்பதால் அதைஎதிர்த்து இதுநாள் வரை தொழில் நடத்தியவர்களே போராடுகிறார்கள்.

எல்லா நாடுகளின் விடுதலை போராட்டத்தில் எப்படி மக்களில் சிறு பிரிவு மட்டும் எல்லோருக்குமாய் போராடியதோ அப்படியே இங்கும் சில உணர்வாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்., ஆனால் பலன் எல்லோருக்கும் கிட்டும்.



மாற்றான் தாய் மனப்பான்மை எதிர்த்து இந்த போராட்டம்...
இந்தியாவில் உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம் , பீகார், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் அங்குள்ள உயர்நீதிமன்றங்களில் அவர்களின் தாய்மொழியில் வழக்காடும் உரிமை பல ஆண்டுகாலமாய் நடைமுறையில் உள்ளது. ஆனால், நம் தாய்மொழிக்கு மட்டும் தடைகள் எங்கிருந்தோ வரும்.



செம்மொழி மாநாடிற்க்கு இடையூறா இந்த போராட்டம்?முதலில் இந்தமாநாட்டின் நோக்கம் உண்மையில் தமிழின் வளர்ச்சிக்கா அல்லது வேறு காரணமா என்று நீங்களே முடிவு செய்யுங்கள்...
மேலவைக்கு பத்து நாட்களில் ஜனாதிபதி ஒப்புதல் வாங்கிய அரசு, அன்னைத் தமிழுக்கு நான்கு வருடமாய் முயலாதது ஏன்?
இந்த தருணம் விட்டால் வேறு சரியான சந்தர்ப்பத்தை நீங்களே கூறுங்கள் போராடும் அவர்களுக்கு.